ட்ரம்ப், ஜின்பிங் சந்திப்பு, பிரதமர் மோடி, ப.சிதம்பரம் (உள்படம்) pt web
இந்தியா

டிரம்ப், ஜின்பிங் மட்டுமே தலைவர்கள்.. பட்டியலில் இடம் பெற விரும்பும் மோடி.. எதார்த்தம் என்ன?

மோடி உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட வேண்டும் என்றாலும், இந்திய பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது மிகச் சிறியது. ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், ஜி-7 மற்றும் ஜி-8 நாடுகளின் முக்கியத்துவம் அதிகம்.

PT WEB

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய முந்தைய கட்டுரைகள்

உலகில் இன்று மிகவும் முக்கியத் தலைவர்கள் டொனால்ட் டிரம்ப், ஜி ஜின்பிங் மட்டுமே. அடுத்து வருபவர்கள் விளாதிமிர் புடின், பெஞ்சமின் நெதன்யாகு. நல்லதோ கெட்டதோ இந்தத் தலைவர்களின் வார்த்தைகளும் செயல்களும்தான் - அவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளின் எல்லைகளையும் கடந்து - விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த வரிசையில் இடம்பெற்றுவிட வேண்டும் என்றே பிரதமர் நரேந்திர மோடியும் விரும்புவார் – அவர் ஏற்கெனவே அந்த இடத்தைப் பிடித்துவிட்டார் என்று அவருடைய கட்சி கூறுகிறது – ஆனால் உண்மை நிலையோ வேறு.

பொருளாதார யதார்த்தம்

trump, xi

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிட, இந்தியப் பொருளாதாரம் அளவில் மிகச் சிறியது. ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தனிநபர் (நபர்வாரி) வருமானத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தனிநபர் வருவாய் மிகவும் குறைவே.

தரவுகள் இதோ:

இந்தியாவின் பொருளாதாரத்தைவிட அமெரிக்காவின் பொருளாதாரம் ஏழு மடங்கு அதிகம், சீனத்தின் பொருளாதாரம் 4.5 மடங்கு பெரியது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி விரைவானதாக இருக்கலாம், ஆனால் அது இப்போதுள்ள அளவைப் போல இரட்டிப்பாக இன்னும் பத்தாண்டுகள் பிடிக்கும். இதற்கிடையில் இந்திய அளவுக்கு விரைவாக இல்லாவிட்டாலும் சிறிய அளவில் வளர்ச்சி அடைந்தாலும் கூட அமெரிக்கா, சீனம் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியைவிட இப்போதிருப்பதைவிட அதிகமாகவே இருக்கும், எனவே இந்த நாடுகளுடன் வளர்ச்சி அளவில் இடைவெளி குறையாது. ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பு, இந்தியாவைவிட டாலர்கள் கணக்கில் குறைவாக இருந்தாலும் - இந்தியாவைவிட அவை பணக்கார நாடுகளாகவே இருக்கும்; தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட முறையே ஆறு மடங்கு, 18 மடங்கு அதிகமாக இருக்கும். உலகில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் இந்தக் கணக்கு தெரியும் - இந்தியாவை இப்போது ஆளும் தலைவர்களைத் தவிர.

மிகப் பெரிய இரண்டு!

இந்தியாவை உலகம் மதிக்க பல காரணங்கள் உண்டு; மக்கள் தொகையில் பெரியது, ஜனநாயகத்திலும் பெரியது, அதன் நெடிய நாகரிகமும் பழமையான கலாசாரமும் தொன்மையானது, உலக சமாதானத்துக்கு பாடுபடும் நாடு; நுகர்வுச் சந்தையில் பெரியது, சந்தையின் அளவு மேலும் வளரக்கூடிய வாய்ப்பு ஆகியவை அதில் சில. வளரும் வல்லரசு என்பதால் இந்தியா மதிக்கப்படுவதில்லை. வர்த்தக வளர்ச்சியிலும் பிராந்திய சமாதானத்திலும் எல்லா நாடுகளுக்கும் ஒரு தேவை இருக்கிறது. ‘இந்தியாவுக்கு நண்பனாக இருக்க வேண்டுமென்றால் - பாகிஸ்தானுக்கு விரோதமாக நடந்துகொள்ள வேண்டும்’ என்ற இந்தியாவின் நிலையை ஏற்காமல்தான் பிற நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் இரண்டுடனும் உறவு கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்.

அது மட்டுமின்றி உலகம் வேகமாக மாறி வருகிறது. ‘ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை நாங்கள்தான் தலைமையேற்று நடத்துகிறோம்’ என்று 2023-ல் இந்திய ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். ‘ஜி-20’ மாநாடாக இருந்தாலும் வேறு எந்த அமைப்பின் உச்சி மாநாடாக இருந்தாலும் சுழற்சி அடிப்படையில்தான் உறுப்பு நாடுகள் தலைமையேற்க வாய்ப்பு வழங்கப்படும். 2024-ல் பிரேசில் தலைமையேற்றது, நவம்பர் 2025-ல் தென்னாப்பிரிக்கா இந்த உச்சி மாநாட்டுக்குத் தலைமையேற்கும், 2026-ல் அமெரிக்கா தலைமை வகிக்கும். ஜி-20 மாநாட்டுக்குத் தலைமை வகிப்பது பெரிய கித்தாய்ப்பல்ல, வேறு இந்த நாடும் இதையெல்லாம் சொல்லி பீற்றிக்கொள்வதில்லை.

இப்போது ஜி-8, ஜி-7 நாடுகளின் அமைப்புகள் ஜி-20 நாடுகள் அமைப்பைவிட முக்கியத்துவம் பெற்றுள்ளன. இப்போது புதிதாக ஜி-2.  சந்திப்பதற்கு முன்னதாகவும் - சந்தித்த பிறகும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனக்கு சமமான அந்தஸ்துள்ள தலைவராக உயர்த்தியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த சந்திப்பின்போது டிரம்ப் உற்சாகம் கொப்பளிக்க காட்சி தந்தார், ஜி ஜின்பிங்கோ உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் பெருமிதம் பொங்க இருந்தார்.

‘பல்முனை நாடுகளின் அமைப்பு உலகம்’ என்று இந்தியா எவ்வளவுதான் கூறினாலும் உண்மையில் உலகம் இந்த இரு துருவ வல்லரசுகளைச் சுற்றியே சுழல்கிறது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ரஷ்யா. அமெரிக்காவின் இருப்புக்கே பெரிய அச்சுறுத்தல் (சீனா) என்று பேசப்பட்டதெல்லாம் இப்போது மர்மமாக மறைந்தே விட்டது. இப்படி இரு பெரும் வல்லரசுகளுக்கிடையே முகிழ்த்திருக்கும் இணக்கமான நட்பால், ‘குவாட்’ என்ற அமைப்பு (இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்தது) முக்கியத்துவமிழந்துவிடும்.

உண்மை நிலவரம் என்னவென்று பார்ப்போம்:

அரிய கனிமவளங்கள் பரிமாற்றம், சோயாபீன்ஸ் இறக்குமதி தொடர்பாக சீனத்துடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தமொன்றை சிறிய அளவில் செய்து கொண்டுவிட்டது, ‘டிக்-டாக்’ செயலி தடை விவகாரத்தையும் இரு நாடுகளும் சுமுகமாகப் பேசி தீர்த்துக்கொண்டுவிடும். அதே சமயம், அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு முழுவதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது, முடிகிறபாடாகத் தெரியவில்லை.

காப்பு வரி விதிப்பதில் அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் ஆவேசம் காட்டி, வரிகளை உயர்த்தி விதிப்பதாக அறிவித்தன, ஆனால் பூசானில் இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்த பிறகு சமாதானமாகப் போக ஒப்புக்கொண்டுவிட்டனர்; உயர் தொழில்நுட்பப் பரிமாற்றம், ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகள், துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணங்கள், இரு நாடுகளும் இறக்குமதிகளுக்கு விதிக்கும் வரிகள் ஆகியவற்றில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள சம்மதித்துவிட்டன. அதே சமயம், இந்தியா மீதான  ‘அபராத இறக்குமதி வரி விதிப்பை’ குறைக்க அமெரிக்கா எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சீன நிறுவனங்கள் மீது விதித்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கவில்லை, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா பெட்ரோலியம் வாங்கினால் இந்திய நிறுவனங்கள் மீதான தடைகளும் விலகாது.

சில சீனப் பொருள்களை வாங்க விருப்புரிமை அடிப்படையிலான பரிமாற்றங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, அதே அடிப்படையில், இந்தியா அனுபவித்துவந்த ‘கொள்முதலில் பொதுவான சிறப்புரிமைகள் (ஜிஎஸ்பி)’ 2019-ல் ரத்தானதும் தொடரும் என்று தெரிகிறது. (வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தச் சலுகை வழங்கப்பட்டது).

ஒதுக்கப்பட்ட நிலையில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்பை கடைசியாக நேரில் சந்தித்தது 2025 பிப்ரவரி 14. அதற்குப் பிறகு இருவரும் சந்திக்க மூன்று வாய்ப்புகள் ஏற்பட்டன. முதலாவதாக, கனடா நாட்டில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, வாஷிங்டன் நகருக்கு வந்து செல்லுமாறு மோடியை அழைத்தார் டிரம்ப். ஆனால் மோடி மறுத்துவிட்டார் – அது சரிதான் என்றே கருதுகிறேன். இரண்டாவதாக, காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்து நாட்டில் கையெழுத்தான நிகழ்ச்சிக்கு நேரில் செல்லவில்லை மோடி. மூன்றாவதாக, ஆசியான் நாடுகளின் உச்சி மாநாடு அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடந்தபோதும் செல்லவில்லை மோடி. காணொலி வாயிலாக அங்கு வந்த தலைவர்களிடையே பேசினார், அது தவறு என்றே கருதுகிறேன். டிரம்பை நேரில் சந்திப்பதையும் இருதரப்பு பேச்சு நடத்துவதையும் தவிர்ப்பதிலேயே மோடி ஆர்வமாக இருக்கிறார் என்றே எல்லோரும் பேசுகிறார்கள்.

trump, modi

 ‘இனி போரைத் தொடர்ந்தால் இரு நாடுகள் மீதும் வர்த்தகத் தடைகளைக் கடுமையாக்குவேன் என்று மிரட்டினேன், பாகிஸ்தான் – இந்தியா போர் நாலே நாளில் முடிவுக்கு வந்தது’ என்று அதிபர் டிரம்ப் பல முறை கூறிவிட்டார். மோடி இதை வெளிப்படையாகவோ நாடாளுமன்றத்திலோ மறுக்கவேயில்லை. சீனத்துருப்புகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் முகத்துக்கு நேராக ஒரு முறைகூட கூறவில்லை மோடி.

டிரம்ப் – ஜி தழுவலானது இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய, தைவான் ஆகிய நாடுகளை மூலையில் தள்ளிய கதையாகிவிட்டது. தெற்காசியாவில் இந்தியாவுக்கு இப்போது நண்பர்களே இல்லை. மேற்காசிய நாடுகள் இப்போது தங்களுக்குள்ளும் இஸ்ரேலுடனும் புதிய ஒப்பந்தங்களைச் செய்துகொள்கின்றன - இந்தியாவைச் சேர்க்காமலே! இதற்குப் பிறகாவது (இந்திய ஆட்சியாளர்கள்), பணிவும் அடக்கமும் கொண்டவர்களாகி புதிய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.