நிதிஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான “புல்லட் ரயில்” திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தை சர்வதேச ஜப்பான் கூட்டுறவு நிறுவனம், இந்திய ரயில்வேத்துறை மற்றும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதற்காக ரூ.1,06,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரத்திலிருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் வரை செல்லும் எனவும், அதன் வேகம் 320 கிலோ மீட்டர் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான செலவுத்தொகையில் சர்வதேச ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் ரூ.86,000 கோடியும் (கடனாக), இந்திய ரயில்வே துறை 10 ஆயிரம் கோடியும், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் தலா 5 ஆயிரம் கோடியும் வழங்கும் என ஒப்பந்தமானது.
திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு ஒரு வருடத்தை கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தான் இதற்கான முதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சர்வதேச ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் வழங்கிய ரூ.5,500 கோடி தான் அந்த நிதி. ஆனால் ரயில்வேத்துறை சார்பிலோ அல்லது மாநில அரசுகள் சார்பிலோ இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புல்லட் ரயில் திட்டம் 2022ஆம் ஆண்டு நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீட்டில் இத்தகைய தாமதமான சூழல் நிலவுவது திட்டத்தை நிறைவு செய்வதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என திட்டத்தை நிறைவேற்றும் தேசிய அதிவேக ரயில்வே கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நிதிப்பிரச்னை மட்டுமின்றி அதைவிடப் பெரிய பிரச்னையாக நிலம் கையகப்படுத்தும் பிரச்னை உள்ளது. புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் 1,400 ஹெக்டர் நிலம் தேவை. ஆனால் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் அளவு வெறும் 0.9 ஹெக்டர் மட்டுமே. இந்த திட்டத்தால் சுமார் 300 கிராமங்களில் உள்ள மக்களது நிலங்கள் கையகப்படுத்தப்பட நேரிடும். இதனால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மக்களிடம் பெறப்படும் நிலத்தின் மதிப்பைவிட 4 மடங்கு அதிகத்தொகை வழங்கப்படும் என்றும், 25% போனஸ் தொகை மற்றும் கூடுதல் தொகையாக 5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதந்தோறும் ரூ.3,600 ஜீவனாம்சம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் மக்கள் நிலத்தின் அரசு மதிப்பைவிட 4.75 மடங்கு அதிகத்தொகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.