அசாம் மாநிலத்தில் நடனக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் சய்கான் மாவட்டத்தில் உள்ள அசோல்போரா பகுதியில் நடைபெற்ற பிகு எனும் விழாவில் 42 பேர் கொண்ட நடனக் குழு கலந்து கொண்டது. அதில் பெரும்பாலானோர் பெண்கள். அந்தக் குழுவினர் நடனமாட தொடங்கியதுமே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் ஆடையை கழட்டுமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். அதனையடுத்து, கீழே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் மேடை ஏறி அவர்களை தாக்க தொடங்கினர். நடனக் குழுவினர் ஓடத் தொடங்கவே துரத்தி அடித்துள்ளனர். கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதால், இந்தச் சம்பவம் நடைபெற்ற மறுநாளே தேசிய பெண்கள் நல ஆணைய தாமாக முன் வந்து எடுத்துக் கொண்டது. இதுகுறித்து நடனக்குழுவின் மேனேஜர் கூறுகையில், “நடனமாடியவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், கல்லூரி மாணவர்கள். 17 அல்லது 18 வயதை சேர்ந்தவர்கள்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக அசாம் போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். நடனக்குழு மேனேஜர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.