இந்தியா

பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகளை ’சன்ஸ்காரி பிராமணர்கள்’ என்ற பாஜக எம்எல்ஏவுக்கு சீட்!

Abinaya

பில்கிஸ் பானோவின் பாலியல் குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட, மற்றும் அவர்களை "சங்கரி பிராமணர்கள்" என்று விவரித்த பாஜக தலைவர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் சந்திரசிங் ரவுல்ஜி, கோத்ரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். முன்னதாக இத்தொகுதியிலிருந்து 6 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்ய ஒருமனதாக முடிவு செய்த குஜராத் அரசாங்க குழுவில் ரவுல்ஜியும் இருந்தார்.

பில்கிஸ் பானோ வழக்கு குறித்து குற்றவாளிகள் குறித்து அவர் பேசியது மிகவும் சர்ச்சையானது. "அவர்கள் ( குற்றவாளிகள்) பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம்(நன்மதிப்பு) கொண்டவர்கள் என்று அறியப்பட்டவர்கள். அவர்களை வைத்து தண்டிப்பது யாரோ ஒருவரின் தவறான நோக்கமாக இருந்திருக்கலாம். குற்றவாளிகள் சிறையில் இருந்தபோது நல்ல நடத்தை உடையவர்கள் " என்றிருந்தார்.

கடந்த குஜராத் தேர்தலுக்கு முன்னதாக 2017 ஆகஸ்டில் சந்திரசிங் ரவுல்ஜி காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார். அவர் 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். பிஜேபிக்கு மாறிய பிறகு, அவர் காங்கிரஸை 258 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்நிலையில் தற்போது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்ற செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.