மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை இணயமைச்சராக பணியாற்றி வந்தவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பத்திரிகையாளராக இருந்த நேரத்தில் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அண்மையில் புகார் எழுந்தது. 10-க்கும் அதிகமான பெண்கள் #MeToo மூலம் அக்பருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இதனையடுத்து பாலியல் புகாருக்குள்ளான எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்தக் குற்றசாட்டுகள் தொடர்பாக ஆப்ரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அக்பர், தனது மவுனத்தைக் கலைத்து அறிக்கை வெளியிட்டார். அதில், தனது நடத்தை மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று கூறினார். அடிப்படை ஆதாரமற்ற புகார்களால் தனது நன்மதிப்புக்கு சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபோன்ற சர்ச்சையை கிளப்புவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியில் இருந்து விலகி தன்மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதால் அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை எம்.ஜே.அக்பர் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.