இந்தியா

மிசோரம் முதல்வராக சோரம்தாங்கா பதவி ஏற்பு

webteam

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் சோரம்தாங்கா முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

மிசோரம் மாநிலத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மிசோ தேசிய முன்னணி கட்சி போட்டியிட்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி கட்சி  26 இடங்களில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி கண்டன. சுயேட்சைகள் 8 பேர் வெற்றி பெற்றனர்.  மிசோ தேசிய முன்னணி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் இன்று மிசோரம் மாநில முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம்தாங்கா பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜசேகரன் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 74 வயது நிரம்பிய சோரம்தாங்கா 10ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மிசோரம் மாநில முதல்வராக பதவி வகித்த அனுபவம் உடையவர் சோரம்தாங்கா என்பது குறிப்பிடத்தக்கது.