தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் கணிப்புகளில் பிழைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா டுடே ஆங்கில செய்தி சேனலுடன் இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 336 முதல் 368 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட இந்த கணிப்பு விவரங்கள், சிறிது நேரத்தில் நீக்கப்பட்டன.
பிறகு மீண்டும் அது வெளியிடப்பட்டபோது எந்தக் கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற பக்கம் மட்டும் இடம்பெறவில்லை. மேலும், தொகுதிவாரியாக வெளியிடப்பட்ட கணிப்பில், மத்திய சென்னை தொகுதியில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய சென்னையில் திமுக போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் என பிழையாக இடம்பெற்றது.
சிக்கிம் மாநில கணிப்பும் மாற்றப்பட்டிருந்தது. மொத்த எண்ணிக்கையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3 இடங்கள் குறைக்கப்பட்டு 365 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.