இந்தியா

ஒடிசாவில் காணாமல்போன கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

JustinDurai

ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன் (26) என்பவர், கடந்த 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர், கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜஸ்ரீயை தேடி வந்தனர்.

இந்நிலையில், கட்டாக் மாவட்டத்தின் அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜஸ்ரீ மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரின் பெற்றோர், இதனை கொலை என்றும் ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்தன என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்ரீ ஸ்வைன், புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக பஜ்ரகபட்டி சென்றிருந்தார். மொத்தம் 25 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த முகாமில் இருந்து புதுச்சேரி செல்லும் அணியின் இறுதிப்பட்டியலில் ராஜஸ்ரீ இடம்பெறவில்லை.

இறுதிப்பட்டியல் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மறுநாள் வீராங்கனைகள் பயிற்சிக்கு செல்ல ராஜஸ்ரீ தனது தந்தையை பார்க்க பூரிக்குச் செல்வதாக சொன்னவர் அதன்பின் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காணாமல் போயுள்ளார். அதேநேரம், மாநில அணியில் அவர் பெயர் இல்லை என்றதும் ராஜஸ்ரீ அழுதுள்ளார். இதனை சக வீராங்கனைகள் கண்டுள்ளனர். இதையடுத்து ஊருக்குச் செல்லவில்லை என்பதை அறிந்த பயிற்சியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.