manika vishwakarma insta
இந்தியா

Miss Universe India 2025.. மகுடம் சூடிய ராஜஸ்தான் ராணி.. யார் இந்த மணிகா விஸ்வகர்மா?

ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா என்பவர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Prakash J

ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த இறுதிப்போட்டியில், அவரது புத்திசாலித்தனமான பதிலால் நடுவர்களை கவர்ந்தார். நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

மகுடம் சூடிய ராஜஸ்தான் ராணி

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப்போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டம் சூட்டப்பட்டார். அவருக்கு 2024 மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவான ரியா சிங்கா மகுடம் சூட்டினார். இதன்மூலம் மணிகா, நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

நடுவர்களைக் கவர்ந்த மணிகாவின் பதில்

இறுதிச்சுற்றின்போது, மணிகாவிடம், "பெண்கள் கல்விக்காக வாதிடுவது அல்லது ஏழைக் குடும்பங்களுக்கு உடனடி பொருளாதார உதவி வழங்குவது ஆகியவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்.. அது, ஏன்? மேலும், எதிர் வாதங்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இரண்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதுதான். ஒருபுறம், நமக்கு நினைவிருக்கும் காலம் வரை கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதை நாம் காண்கிறோம். மறுபுறம், இந்த இழப்பின் விளைவை நாம் வறிய குடும்பங்கள் மூலம் காண்கிறோம். நமது மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்தினருக்கு அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன. எனினும், நான் தேவைப்பட்டால், பெண் கல்வி என்ற விருப்பத்தையே தேர்ந்தெடுப்பேன். மேலும், இது ஒரு நபரின் வாழ்க்கையை மட்டும் மாற்றாது என்பதால் நான் அதை ஆதரிப்பேன்; இது இந்த நாட்டின், இந்த உலகின் எதிர்காலத்தின் முழு அடுக்குகளையும் மாற்றும். இரண்டு பிரச்னைகளும் முக்கியமானவை என்றாலும், நீண்ட காலத்திற்கு உதவக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பது பற்றியது” எனப் பதிலளித்தார்.

இந்தப் புத்திசாலித்தனமான பதில் மூலம் நடுவர்களைக் கவர்ந்த அவர், நடப்பாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவானார். மேலும் இதன் இறுதிப் போட்டியில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தான்யா சர்மா முதல் ரன்னர்-அப் இடத்தையும், மெஹக் திங்க்ரா இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும், ஹரியானாவைச் சேர்ந்த அமிஷி கௌஷிக் மூன்றாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.

manika

யார் இந்த மணிகா விஸ்வகர்மா?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தின் இறுதியாண்டு மாணவியான மணிகா, கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டத்தை வென்றவர் ஆவார். நரம்பியல் வேறுபாடு தொடர்பான உரையாடல்களை மறுவடிவமைப்பதற்காக வாதிடும் ஒரு தளமான நியூரோனோவாவின் நிறுவனராக மணிகா உள்ளார். பன்முகத் திறமை கொண்ட மணிகா விஸ்வகர்மா, முன்னதாக வெளியுறவு அமைச்சகத்தின்கீழ் நடைபெறும் பிம்ஸ்டெக் செவோகானில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். புகழ்பெற்ற பொதுப் பேச்சாளர் மற்றும் கலைஞரான இவர், லலித் கலா அகாடமி மற்றும் ஜேஜே கலைப் பள்ளியால் கௌரவிக்கப்பட்டார். தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC) பட்டதாரியான இவர், ஒரு திறமையான பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் ஓவியராகவும் உள்ளார்.

இன்ஸ்டாவில் பதிவு

இன்ஸ்டாகிராமில் மணிகா விஸ்வகர்மா ஒரு பதிவில், “மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தானில் எனது தகுதியான வாரிசுக்கு எனது கிரீடத்தை வழங்கிய அதே நாளில், அடுத்த அத்தியாயத்தில் நான் அடியெடுத்து வைத்தேன். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா இறுதி ஆடிஷன்களின் மேடையில் நின்று… ஓர் அத்தியாயத்தை முடித்துவிட்டு மற்றோர் அத்தியாயத்தைத் தொடங்குவது, அதே நாளில், ஒரு விபத்து அல்ல. அது சீரமைப்பு. வளர்ச்சி எப்போதும் ஓர் இடைநிறுத்தத்திற்காகக் காத்திருக்காது என்பதை நினைவூட்டுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.