இன்றைக்கு உலகம் முழுக்க உள்ள மக்களைப் பீதியடைய செய்துள்ள கொரோனாவை போல 1918-ஆம் ஆண்டு உலக நாடுகளையே ‘ஸ்பானிஷ் ப்ளூ’அச்சுறுத்தி வந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தக் கொரோனா வைரஸ் நோயைப் போலவே 1918 ஆண்டு உலகம் முழுக்க அச்சுறுத்தி வந்த வைரஸ் காய்ச்சல் ஒன்று உண்டு. அதன் பெயர் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய். ஆனால் இதனை பெரும்பாலும் "ஸ்பானிஷ் காய்ச்சல்" என்றே மக்கள் இன்றுவரை உலகம் முழுக்க குறிப்பிடுகிறார்கள். 1918 ஆம் ஆண்டு இந்தத் தொற்று நோயில் சிக்கி 50 முதல் 100 மில்லியன் மக்கள் இறந்துவிட்டதாக புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது. அன்றைய காலத்தில் உலகத்தையே அச்சுறுத்திய வைரஸாக இன்ஃப்ளூயன்ஸா இருந்ததாக வரலாற்றுச் சம்பவங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் இறப்பு விகிதம் உலக மக்கள் தொகையில் ஏறக்குறை 5 சதவீதம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அரை பில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதித்ததைப்போல இந்த வைரஸ் காய்ச்சல் ஆரோக்கியமான இளைஞர்களின் உயிரையும் பறித்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஆகவேதான் இதை வரலாற்றில் மிகப் பெரிய தொற்றுநோய் இதுதான் என்று கூறுகின்றனர். அன்றைய காலத்தில் இந்த நோய் குறித்து பல்வேறு தவறான வதந்திகள் பரவியதாகவும், மேலும் பலர் இதன் உண்மைத் தன்மைக்கு எதிரான தகவல்களை கொண்டிருந்ததாகவும் மருத்துத்துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர். ஏறக்குறைய கொரோனா வைரஸுக்கு எதிராகவும் இதே போன்ற வதந்திகள் பரவி வருவதையும் மருத்துவ உலகின் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர்.
‘ஸ்பானிஷ் காய்ச்சல்’ அதாவது ஸ்பானிஷ் ஃப்ளூ என அழைக்கப்படுவதால் பலரும் இதை ஸ்பெயினில் தோன்றியதாக நினைத்துவிடுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. இந்தக் காய்ச்சல் தோன்றிய சரியான நிலப்பரப்பு எது என்பது குறித்து இன்றுவரை விவாதம் சென்று கொண்டிருக்கிறது. கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கன்சஸை ஆகிய பகுதியிலிருந்து உருவாகி இருக்கலாம் என்ற ஒரு கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் நிரூபிக்கப்பட்ட கருத்து அல்ல.