ஆசிரியருக்கு கத்திக்குத்து
ஆசிரியருக்கு கத்திக்குத்து Twitter
இந்தியா

”மாணவிகளுடன் பேசாதே; ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய ஆசிரியருக்கு கத்திக்குத்து - மாணவன் வெறிச்செயல்!

Justindurai S

மும்பையில் உள்ள மீரா சாலையில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தி வருபவர் ராஜு தாக்கூர் (26). இவர் கடந்த வியாழக்கிழமை மீரா சாலையோரமாக நின்று தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த சிறுவன் ஒருவன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜு தாக்கூரை திடீரென்று குத்த ஆரம்பித்தான். இதனை எதிர்பாராத ராஜு தாக்கூர் சிறுவனை தடுக்க முயன்றார். அருகில் நின்ற நண்பர்களும் சத்தம் எழுப்பியவாறு சிறுவனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த சிறுவன், ராஜு தாக்கூரை கீழே தள்ளி வயிற்றில் சராமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றான். ராஜு தாக்கூரை அவரது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கத்தியால் குத்திய மாணவர் ஆசிரியர் ராஜு தாக்கூர் நடத்திவந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார். அப்படி படிக்கும் போது சரியாக படிக்காததால் மாணவனை ஆசிரியர் கண்டித்துள்ளார். அதோடு பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவிகள் சிலருடன் மாணவர் மிகவும் நெருக்கமாக பேசியிருக்கிறார். இதனையும் ஆசிரியர் ராஜு தாக்கூர் கண்டித்து, படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கிடையில் மாணவன் ஆசிரியருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மாணவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்தும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.