சத்தீஸ்கர் மாநிலம், பலோடாபஜார் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு சிறுமிகளை எட்டுபேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வெளியிடுவேன் என்று ஒருவர் தன்னை மிரட்டுவதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கும்போதுதான் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் மே 31 ஆம் தேதி நடந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் புதன்கிழமையன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னை எட்டுபேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தாகக் கூறியுள்ளார். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் நபர், தன்னிடம் அந்த வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்திர கல்யாண் , “ சம்பவம் நடந்த அன்று சகோதரிகள் இருவரும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில் எட்டு பேர் கும்பல் அவர்களை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அதில் நண்பர்கள் இருவரும் பயந்துவிட, பின்னர் அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட எட்டுபேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு, அவர்கள்மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமிகள் இருவரும் மைனர் என்பதால் அவர்களுடைய நண்பர்கள்மீது கடத்தல்வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்