இந்தியா

பெங்களூரு மாணவியின் பெயரில் கிரகம்!

webteam

பெங்களூரு மாணவி ஒருவரின் பெயர் பால்வெளியில் உள்ள கிரகம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. 
பள்ளி மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டியாகக் கருதப்படுவது இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் பேர் எனப்படும் அறிவியல் கண்காட்சி. அமெரிக்காவின் மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இந்த போட்டியில் சிறப்பு விருதினை பெங்களூருவைச் சேர்ந்த சாஹிதி பிங்கலி எனும் மாணவி வென்றார். இதையடுத்து சாஹிதியைக் கௌரவிக்கும் வகையில் பால்வெளியில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்டுவதாக லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது. நன்னீர் நிலைகளின் சுத்தத்தைக் கண்காணிப்பதற்காக மொபைல் அப்ளிகேஷன் குறித்த சாஹிதியின் ஆய்வறிக்கை நடுவர்களின் கவனம் ஈர்த்தது. இதன் இறுதிப் போட்டியில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட நிலையில், சாஹிதியின் ஆய்வறிக்கை முதல் மூன்று இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அறிவியல் கண்காட்சியில் மூன்று சிறப்பு விருதுகளை வென்ற சாஹிதி, ஒட்டுமொத்தமாக 2ஆவது பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள இன்வென்சர் அகாடெமியில் சாஹிதி 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.