இந்தியா

"நிலுவைத்தொகை செலுத்தியாச்சு; மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல" - அமைச்சர் செந்தில் பாலாஜி

சங்கீதா

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசுத் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி தனது ட்விட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

மின்சாரப் பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் ( POSOCO- Power System Operation Corporation) தலைவர் எஸ்.ஆர். நரசிம்மன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்றக் கட்டணமாக 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. பில் (BILL) தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில், அதைக் கடந்தும் செலுத்தாத காரணத்தால் மின்சார கொள்முதல் மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் இந்த தடையை எதிர்கொண்டுள்ளநிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட விளக்கத்தில், தற்போதைய நிலவரப்படி 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவை வைத்திருப்பதாகவும், 70 கோடி ரூபாய் நிலுவையை சனிக்கிழமை செலுத்தியபின் வழக்கமான நிலைதொடரும் என்று டான்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இதுசம்பந்தமாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் ‘PRAAPTI PORTAL' இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை. நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை.

சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை. சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.