இந்தியா

சிலிண்டர் மானியம் ரத்து இல்லை: அமைச்சர் விளக்கம்

சிலிண்டர் மானியம் ரத்து இல்லை: அமைச்சர் விளக்கம்

webteam

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார். எந்த தரப்பினருக்கு மானியம் தருவது என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். எரிவாயு மானியம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கேஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மாநிலங்களவையில் இன்று பெரும் அமளி நிலவியது. அவையின் மையப் பகுதிக்கு வந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மானியம் ரத்து செய்யும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனக் கோஷமிட்டனர்.

முன்னதாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு சிலிண்டர் விலையை மாதத்திற்கு 4 ரூபாய் உயர்த்துவதாகக் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் உறுப்பினர் தபன் சென் இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என குற்றம்சாட்டினார். இது லாபத்தைக் குறி வைத்து இயங்கும் அரசு என சமாஜ்வாதியின் நரேஷ் அகர்வால் விமர்சித்தார். எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை இன்று அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.