அமெரிக்கா–ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வளைகுடா நாடுகளை நம்பிய இந்தியா, வெனிசுலா மற்றும் ரஷ்யாவில் இருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கி வருகிறது. சந்தை விலையை விட குறைவாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதால் தினமும் 1,000 கோடி ரூபாய் இழப்பு என அமைச்சர் எச்சரித்து, விலை உயர்வு தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் வகையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் சுமார் 1 மாதம் நீடித்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஈரான் உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது.
இதன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய்க்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் இறக்குமதி வளைகுடா நாடுகளை நம்பி இருந்த நிலையில், இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் வருகை கடுமையான பாதிக்கப்பட்டது.
இந்த நிலைமையை சமாளிக்க வெனிசுலா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் விலைக்கு இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன. அதே நேரம் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லை.
இந்த நிலையில் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதால் நாளொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள இயலாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியுள்ளது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.