திமுக குறித்த பேச்சை திரும்பப் பெற்ற பிரதான் முகநூல்
இந்தியா

மக்களவையில் கர்ஜித்த கனிமொழி... திமுக குறித்த பேச்சை திரும்பப் பெற்ற பிரதான்!

” மும்மொழிக்கொள்கையில் தமிழக அரசுக்கு முறையான புரிதல் இல்லை. ” - தர்மேந்திர பிரதான்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றநிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியது.

யார் அந்த சூப்பர் முதலமைச்சர்?: பிரதான் கேள்வி

இதில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ - டர்ன் போட்டது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். சூப்பர் முதல்வர் யார்?. யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்பி. கனிமொழி பதில் அளிக்க வேண்டும்.” என்று பேசிய அவர்,

நாகரீகமற்றவர்கள்!

தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் . ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளார்.

இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக எம்பி கனிமொழி,

திமுக குறித்த பேச்சை திரும்பப் பெற்றார் பிரதான்

” தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள். ஒருபோதும் கூறியதில்லை. தமிழக எம்பிக்களையும் தமிழக மக்களையும் நாகரீகமற்றவர்கள் என தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கான நிதியை கொடுக்க வேண்டும் என முதல்வர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

தமிழக அரசுக்கு முறையான புரிதல் இல்லை..

”மும்மொழிக்கொள்கையில் தமிழக அரசுக்கு முறையான புரிதல் இல்லை. எனது மகள் பள்ளியில் 3 ஆவது மொழியாக மராத்தியை படித்து வருகிறார். வலுவான காரணமின்றி மும்மொழியை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் எதோ அரசியல் நடந்துவிட்டது. “ என்று தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.