இந்தியா

ஊழல் புகார்... அமைச்சரை தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம்

webteam

ஊழல் புகாரில் சிக்கிய மத்தியப்பிரதேச நீர்பாசனத் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

கடந்த 2008ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முறையான செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நரோட்டம் மிஸ்ரா அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது செலவுக் கணக்கு குறித்த சில தகவல்களை மிஸ்ரா அளிக்கவில்லை என்று கடந்த 2009ல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பார்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விளக்கமளிக்கும்படி மிஸ்ராவுக்கு, தேர்தல் ஆணையம் கடந்த 2013 ஜனவரியில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து குவாலியர் நீதிமன்றத்தில் மிஸ்ரா தடை பெற்றார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றம் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் குவாலியர் உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து, டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரானார். குறிபிட்ட காலஅவகாசத்துக்குள் முறையான செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. சிவராஜ்சிங் சௌகான் தலைமையிலான மத்தியப்பிரதேச அரசில் நீர்பாசனத் துறை அமைச்சராக நரோட்டம் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார்.