priyanka gandhi, dharmendra pradhan x page
இந்தியா

பி.எம் ஸ்ரீ திட்டம் | விமர்சித்த பிரியங்கா காந்தி.. பதிலடி கொடுத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash J

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசு கடந்த, 2022ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 500 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பி.எம் ஸ்ரீ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும், இத்திட்டத்திற்காக 60 சதவீத நிதியை மத்திய அரசும், மீதம் உள்ள 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு ஒன்றையும் விதித்திருந்தது.

pm shri

அதன்படி, பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020இன் படியே கல்வித்திட்டம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாமல் இருந்து வந்தன. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சேர வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில்தான், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கடுமையாக எதிர்த்து வந்த கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவுள்ள பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சமீபத்தில் இணைவது குறித்து கருத்து தெரிவித்திருந்தது. பின்னர், கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.

இதற்கிடையே, குழந்தைகளை மூளைச்சலவை செய்யும் நோக்கில் பி.எம்.ஸ்ரீ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதாகவும், வரலாற்றுத் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தரீதியாக இது கட்டமைக்கப்பட்டு உள்ளதாகவும், இது குழந்தைகளுக்கோ அல்லது கல்வி முறைக்கோ ஏற்றது அல்ல என பிரியங்கா காந்தி எம்.பி. கூறினார். குழந்தைகளுக்கு பல்வேறு விஷயங்கள் தெரியவதன் மூலமே அவர்களால் சிறந்த திசையில் பயணிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரியங்கா காந்தி

ஆனால், பிரியங்கா காந்தியின் பி.எம்.ஸ்ரீ திட்ட விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பிரியங்காவின் கருத்து அறியாமை மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுவதாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தர்மேந்திரபிரதான், சீர்திருத்தங்களை ஏற்பதில் சிலருக்கு சிக்கல் இருப்பதாகவும், அதுவே வெற்றியை ஒப்புக்கொள்ள தடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதுமை, விமர்சன சிந்தனை மற்றும் தேசத்தின் பாரம்பரியத்தில் பெருமையை கொண்டு குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதே சிந்தாந்தம் எனவும் அவர் கூறியுள்ளார்.