இந்தியா

அரசுப் பள்ளியில் படித்துதான் இந்த இடத்தை பிடித்துள்ளேன் - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மாணவி

அரசுப் பள்ளியில் படித்துதான் இந்த இடத்தை பிடித்துள்ளேன் - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மாணவி

webteam

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அமைச்சர் கமலக்கண்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. 829 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில் நேர்காணல் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில் பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அகில இந்திய அளவில் 36வது இடத்தையும் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தையும் காரைக்காலைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி பிடித்துள்ளார்.

அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் சரண்யாவை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். 36 வது இடத்தை பிடித்த சரண்யா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சரண்யா கூறுகையில், அரசு பள்ளியில் படித்து இந்த இடத்தை பிடித்துள்ளதாகவும், தான் தமிழகத்தில்தான் பணியாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.