இந்தியா

”மத்திய அரசு போதியளவு கோமாரி நோய் தடுப்பூசியை தரவில்லை”- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

”மத்திய அரசு போதியளவு கோமாரி நோய் தடுப்பூசியை தரவில்லை”- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

நிவேதா ஜெகராஜா

மத்திய அரசு கோமாரி நோய் தடுப்பூசியை போதிய அளவு வழங்காததால்தான் கால்நடைகள் உயிரிழப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியையடுத்த திமிரி, தாமரைப்பாக்கம், மோசூர் உள்ளிட்ட பகுதிகளில் கோமாரி நோய் தாக்கி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் 120-க்கும் மேற்பட்டவை உயிரிழந்துள்ளன. இந்நிலையில் அரக்கோணம் வந்த கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோமாரி நோய் உயிரிழப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், “ஆண்டுதோறும் மத்திய அரசு தரப்பிலிருந்து தமிழகத்துக்கு 90 லட்சம் டோஸ் கோமாரி நோய் தடுப்பூசிகள் வழங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 20 லட்சம் டோஸ் கோமாரி நோய் தடுப்பூசிகள் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள எல்லா கால்நடைகளுக்கும், கோமாரி நோய் தடுப்பூசியை குறித்த காலத்தில் போட முடியவில்லை. இதன்காரணமாக கோமாரி நோயால் கால்நடைகள் உயிரிழந்தது.

தமிழகத்தில் 1,450 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் விரைவில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்தார்.