காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்குள்ள பண்டிட் சமூகத்தினரை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் மற்றும் பண்டிட்டுகளை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கும் நிகழ்வு அதிகரித்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு சூழல் மோசமடைந்துள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அவரது தனது பயணத்தின் 2ஆவது நாளான இன்று ஜம்முவில் ஐஐடி விழாவில் கலந்துகொள்வதுடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் அவர் அதையடுத்து பண்டிட் சமூகத்தினருடன் உரையாட உள்ளார்.
நாளை காஷ்மீரில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களை சந்தித்து அவர் உரையாட உள்ளார். முன்னதாக காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகளிடம் அமித் ஷா நேற்று கேட்டறிந்தார். காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையிலும் அமித் ஷாவின் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.