மது வாங்குவதற்கு மட்டுமே வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குடிப்பதற்கு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23ஐ எதிர்த்து வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், “டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ன்படி டெல்லியில் ஒருவர் மது வாங்கவும் குடிக்கவும் 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞர் உத்தரப்பிரதேசம், கோவா, தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மது குடிப்பதற்கு 21 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “மனுதாரர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ஐ தவறாக புரிந்து கொண்டுள்ளார். ஏனென்றால் இந்தச் சட்டத்தில் மது வாங்குவதற்கு மட்டும் தான் 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மது குடிப்பதற்கு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகவே இந்தப் பிரிவில் எந்தவித தவறும் இல்லை. எனவே இந்தப் பிரிவு நாங்கள் நீக்க தேவையில்லை” என்று கூறினர்