இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பாக்., ராணுவத்துடையதா ?

webteam

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் குண்டுகள்‌ பாகிஸ்தான் பாதுகாப்பு படையிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகளால் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. பாகிஸ்தானின் ஜெயிஷ் இ முகம்மது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டது, எப்படி கொண்டுவரப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருளிலுள்ள ரசாயனம் பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளனர்.  

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் குண்டுகள் ராணுவத்தில் பயன்படுத்தப்படுபவை என்றும், பாகிஸ்தானின் பாதுகாப்புப்படை இந்த குண்டுகளை பயங்கரவாதிகளுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே அது இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும்‌ தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்‌ளனர்.

மேலும் ''இந்தியாவுக்குள் வெடிபொருட்கள் உதிரிகளாக கொண்டு வரப்பட்டு இங்கு வைத்து வெடிகுண்டாக உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்ற 5 - 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வெடிகுண்டுகளை உருவாக்கி இருக்க வேண்டும். சரியான நேரத்தில் வெடிக்கும் விதத்தில் இந்த வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றை உருவாக்க வெடிகுண்டு தயாரிப்பதில் நன்கு பழக்கமான ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தீவிரவாதி ஓட்டி வந்த கார் மாருதி எகோ மாடல் வண்டியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு தாக்குதல் குறித்து விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.