தந்தை பெரியார் அரசு வெளியிட்ட வீடியோவில் இருந்து...
இந்தியா

தீண்டாமைக்கு எதிரான சமத்துவ குரல்! சீர்திருத்த பாதையில் மைல்கல்.. வைக்கம் போராட்ட வரலாறு இதுதான்!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில் வைக்கம் வீரராக தந்தை பெரியாரை கேரளாவும் கொண்டாடுவதற்கான காரணத்தை பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்..

PT WEB

செய்தியாளர் ராஜ்குமார்

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார், அண்டை மாநிலமான கேரளாவில் வைக்கத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், சமூக சமத்துவத்துக்காகவும் போராடி அதில் வெற்றி கண்டவர். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில் வைக்கம் வீரராக தந்தை பெரியாரை கேரளாவும் கொண்டாடுவதற்கான காரணத்தை பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்..

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் உள்ள மகாவீரர் கோயில்தான் மையப்புள்ளி. இந்த கோயிலைச்சுற்றி உள்ள வீதிகளில் பட்டியலின மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து கேரள காங்கிரஸ் கட்சியினர் 1924 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மகாத்மா காந்தியிடம் வைக்கம் வைதீகர்கள் முறையிட்டனர்.

வைக்கம் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், இதற்கு வலு சேர்க்க தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தத்திற்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்ட பெரியார் வைக்கத்திற்குச் சென்று போராடினார். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 74 நாட்கள் சிறையில் இருந்து கொடுமைகளை அனுபவித்தார். ஆயினும் போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஈரோடு சென்றபோது மற்றொரு வழக்கில் பெரியார் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தலையிட்டு பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மகாதேவர் கோயில் வீதிகளில் அனைத்து தரப்பினரும் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வைக்கம் போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நிறைவை கொண்டாடும் நிலையில் தமிழக அரசு சார்பில் 8.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கேரளாவில் பெரியார் நினைவகம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் இணைந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

எல்லைகள் கடந்து அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம், சமூக சீர்த்திருத்திற்கான பாதையில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.