மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்குக் காலத்திலும் ஊருக்குச் செல்லாமல் தெலங்கானாவில் தெருக்களில் சுற்றி வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார்கள். "இதுவொரு நல்ல முடிவுதான். ஊருக்குச் சென்றிருந்தால் வாழ்க்கை மேலும் மோசமாக மாறியிருக்கும்" என்று அவர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமும் ஊர் ஊராகச் சென்று பிளாஸ்டிக் நாற்காலிகளை விற்பதுதான் வேலை. "இந்தக் காலத்தில் மக்கள் நாற்காலிகள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்காலத்தில் வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது " என்கிறார் 35 வயதான புலம்பெயர் தொழிலாளர் பராசனுல். மத்தியப்பிரதேச மாநிலம், நிவாரி பகுதியைச் சேர்ந்தவர், ஊரடங்கு காலத்தில் ஊருக்குச் செல்லாமல் வியாபாரத்தைத் தொடர்கிறார்.
இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் ஊருக்கு நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்ற நிலையில் அவருடன் சேர்ந்து பத்து நண்பர்கள் தெலங்கானா மாநிலத்திலேயே தங்கிவிட்டனர். மார்ச் மாத தொடக்கத்தில் மத்தியப் பிரதேசத்தில் மனைவி, இரு குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்தார் புலம்பெயர் தொழிலாளர் பரசானுல்.
நண்பர்களுடன் சேர்ந்து நிர்மல், நிசாமாபாத், கம்மரெட்டி மாவட்டங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகளை அவர் விற்றுவருகிறார். ஒவ்வொரு 15 நாளுக்கும் ஒருமுறை இடத்தை மாற்றுகிறார்கள். மத்தியப்பிரதேச மாநிலம், அசோக் நகரில் இருந்து வந்துள்ள அமர்சிங், "வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருந்தாலும் என்ன செய்திருப்போம்? வேலையும் கிடைத்திருக்காது. சம்பளமும் மிகக் குறைவாகக் கிடைத்திருக்கும். நிலைமை சீராகும் வரை எதுவும் நடக்காது " என்கிறார்.
சிலநேரங்களில் செல்லும் ஊர்களில் தங்கி அவர்களே சமைத்துக்கொள்கிறார்கள். சமையல் செய்ய நேரம் இல்லாதபோது, தெருவோர உணவகங்களில் சாப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் பல நிறுவனங்களைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்களிடம் வேலை பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் இருசக்கர வாகனத்தில் நாற்காலிகளை அடுக்கிக்கொண்டு முகக்கவசம் அணிந்து கிருமி நாசினியுடன் கிராமங்களை நோக்கிப் புறப்படுகிறார்கள்.