இந்தியா

டெல்லி -பீகார்: சைக்கிளில் புறப்பட்ட தொழிலாளர் விபத்தில் மரணம்

டெல்லி -பீகார்: சைக்கிளில் புறப்பட்ட தொழிலாளர் விபத்தில் மரணம்

webteam

(கோப்பு புகைப்படம்)

டெல்லியில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் புறப்பட்ட தொழிலாளர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் பயணம் செய்து வருகின்றனர். சில மாநில அரசுகளும் சிறப்பு ரயில்சேவை மூலம் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் புறப்பட்ட தொழிலாளர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

26வயதான சாஹீர் அன்சாரி என்பவர், டெல்லியில் இருந்து சைக்கிள் மூலம் பீகாருக்கு, புறப்பட்டுள்ளார். சுமார் 1000கிமீ தூரத்தை கடந்து சொந்த ஊருக்குச் செல்ல மொத்தம் 8 பேர் பயணத்தை தொடங்கியுள்ளனர். அப்போது 500கிமீ கடந்துவிட்ட நிலையில் அனைவரும் காலை சாப்பாட்டிற்காக இரு சாலைகளின் நடுவே உள்ள மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சாஹீர் அன்சாரி உயிரிழந்தார். நடுவே மரம் இருந்ததால் மற்றவர்கள் உயிர்பிழைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். உயிரிழந்த அன்சாரிக்கு ஒரு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.