இந்தியா

சட்டம் ஒழுங்கை காக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்..!

சட்டம் ஒழுங்கை காக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்..!

Rasus

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து போராட்டங்கள் தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கும் பரவியுள்ளன. கடந்த சனிக்‌கிழமை டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவங்களும் அதைத்தொடர்ந்து மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதும் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நிகழ்வையடுத்து ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‌இதுபோன்ற போராட்டங்களை காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டினார். மாவோயிஸ்ட்டுகள் பிரிவினைவாதிகள் போராட்டங்களில் கலந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மாணவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் இந்து, முஸ்லிம் மக்களிடம் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார்.

இதற்கிடையில் போராட்டத்தை தொடர்ந்து வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை காவல் துறை தாக்கியதை கண்டித்த பிரியங்கா, அரசமைப்பு சாசனத்தை காப்பதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றார். இதன் பின் இந்தியா கேட் பகுதியில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, பல்கலைக்கழகத்திற்குள் காவலர்களை யார் அனுமதித்தனர் என கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்றார். மாணவர்கள் மீதான தாக்குதலால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

இதற்கிடையில் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து டெல்லி காவல் துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில், சட்டம், ஒழுங்கை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கும், வதந்திகளை பரப்புபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது