இந்தியா

தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை: சாலை, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை: சாலை, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

webteam

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, கனமழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. மழைநீரில் மும்பையே மூழ்கி இருக்கும் நிலையில், மேலும் கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

மும்பை, மகாராஷ்டிரா மும்பை, நவி மும்பை, தானே பகுதிகளில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதில், கிழக்கு எக்ஸ்பிரஸ் ஹைவே, மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே, எல்.பி.எஸ் மார்க் உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. புறநகர் ரயில் சேவையும் முற்றிலும் முடங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தேவை ஏற்பட்டால் தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட விநாயக சதுர்த்தியின் முக்கிய நிகழ்வான சிலை கரைக்கும் ஊர்வலமும் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டது. கனமழையால், மகாராஷ்டிர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையோடு, கடல் சீற்றமும் அதிக அளவில் இருக்கிறது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மிக பலத்த, மிக மிக கனத்த மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.