இந்தியா

சீன செயலிகளுக்கு தடையா?: பரவும் அறிவிப்பாணை உண்மையானதா?

webteam

சீன செயலிகளுக்கு தடை என்ற அறிவிப்பாணையின் உண்மைத் தன்மை குறித்து PIB Fact Check விளக்கம் அளித்துள்ளது

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் பல செல்போன் செயலிகளுக்கு எதிராக கருத்துகள் பதியப்பட்டன.

சீனாவில் உருவாக்கப்பட்ட சில செல்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளதாகவும் இனி அந்த செயலிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் செய்திகள் பரவின. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறி, அறிவிப்பாணை ஒன்றும் இணையத்தில் பரவியது.

இந்நிலையில் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என PIB தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பாக PIB Fact Check ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தில், சீனாவின் சில செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அறிவிப்பாணை ஒன்று வைரலாகி வருகிறது. அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பாணையும் போலியானது எனத் தெரிவித்துள்ளது