கர்நாடகா முகநூல்
இந்தியா

கர்நாடகா|சேலை அணிந்து மோசடி செய்த ஆண்கள்; 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியதுபோல, ஆண்கள் சேலை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது..

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படுவது வழக்கம். இதில் நாள் ஒன்றுக்கு ரூ.370 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்ததிட்டத்தின்கீழ், கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டம் மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்னை அருகில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழு படம், அரசின் என்.எம்.எஸ்., எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. புகைப்படத்தில் இருப்பது பெண்கள் இல்லை என்று சந்தேகம் எழுந்தநிலையில் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்கள் குழு ஒன்று சேலை உடுத்தி தலையை மூடுக்கொண்டு பெண்களை போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பெண் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று பொய்யாக கணக்கு காட்டி அதன் மூலம் பண மோசடி செய்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் பிப்ரவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பஞ்சாயத்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

பெண் தொழிலாளர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்திருக்கும் சூழலில், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி இதுகுறித்து தெரிவிக்கையில், “இந்த வழக்கில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு அவுட்சோர்ஸ் ஊழியர் இதைச் செய்தார். முழு மோசடியும் எனக்குத் தெரியாது. இது என் கவனத்திற்கு வந்தபோது, ​​நான் அந்த ஊழியரை இடைநீக்கம் செய்தேன். இப்போது, ​​கிராமத்தில் MGNREGA பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன. நாங்கள் 2,500 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளோம்.” என்றார்.