மெலியோயிடோசிஸ் (melioidosis) என்பது ஒரு பாக்டீரியா தொற்றாகும். இது மண்ணிலும், நீரிலும் காணப்படும் பர்கோல்டேரியா சூடோமல்லி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் காசநோய் போலவே இருப்பதால், தொடக்கத்தில் இதனை கண்டறிவது கடினமாக உள்ளது. சரியாகக் கண்டறியப்படும் நேரத்தில், தொற்று பொதுவாக பல உறுப்புகளுக்குப் பரவியிருக்கும் அபாயமும் உள்ளது. இந்த நோய், ஈரமான மண் மற்றும் நீர் மூலமாகப் பரவுவதால், நெல் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு அதிக அச்சுறுத்தலாக உள்ளது. போபாலில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சுகாதார மற்றும் வேளாண்மைத் துறைகள் இணைந்து இந்த நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளளார். கர்நாடகா, தமிழகம், ஒடிசா போன்ற கடலோர பகுதிகளில் மட்டுமே இருந்த இந்த பாக்டீரியா நோய்தொற்று, இப்போது மத்தியப் பிரதேசத்தில் வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியான காய்ச்சல் தாக்குதல்கள், காசநோய் போன்ற தொடர்ச்சியான இருமல், மார்பு வலி மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் சிரமம் ஆகியவை மெலியோயிடோசிஸின் அறிகுறிகள் எனவும் இவ்வறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் மருத்துவமனைகளை அணுக வேண்டும் எனவும் மத்திய பிரதேச மாநில மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் மண் மற்றும் தண்ணீருடன் நேரடி தொடர்பு கொள்வதால் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக மது அருந்துபவர்களும் இந்த நோய் தொற்றால் அதிக பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இந்த நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசாங்கம் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு மருத்துவ சிகிச்சையும் அரசின் செலவில் இலவசமாக வழங்கப்படும் எனவும் நோயின் அறிகுறிகள் தென்படுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விளக்கவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை இதுகுறித்து மிக முக்கியம் வாய்ந்த ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி மத்தியப் பிரதேசத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 130க்கும் அதிகமான நோயாளிகளுக்கு மெலியோயிடோசிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் கிராமப்புற மற்றும் விவசாயப் பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த அவசர நடவடிக்கைகளின் மூலம், நோய் பரவலைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.