காவிரியின் ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தங்கள் மாநில உரிமை என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.
குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது.
இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. மேகதாது அணைக் கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருவில் முக்கிய ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார், காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை என்றும் அதற்காக யாருடனும் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. மேகதாது அணை தங்கள் வாழ்நாள் கனவு . தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள், நண்பர்கள், அவர்களுடன் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் நிலையில், சண்டையிட விரும்பவில்லை. இதையடுத்து, இன்று மேகதாது அணைக்கான பகுதியில் ஆய்வுப் பணியைத் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
காவிரியில் மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.