இந்தியா

''வீட்டுக் காவலில் உள்ளேன்; காஷ்மீரில் இயல்புநிலை இல்லை'' - மெகபூபா முப்தி

JustinDurai
தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், காஷ்மீர் மக்களின் உரிமைகளை வேண்டுமென்றே மறுக்கிறது. நான் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். காஷ்மீர் நிர்வாகத்தின் கருத்துப்படி காஷ்மீரில் இயல்புநிலை இல்லை. இயல்புநிலை இருப்பதாக கூறும் அவர்களின் போலித்தனத்தை வெளிக்காட்டுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால், ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதாகவும், சூழல் முழுமையாக இயல்புக்கு வந்து விட்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரிவினைவாதத் தலைவர் சயத் அலி கிலானியின் இறுதிச் சடங்கு குறித்து கருத்து தெரிவித்த மெகபூபா முப்தி, “மறைந்த ஒருவரின் இறுதிச் சடங்கை நடத்த குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இங்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்கை நடத்த அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பாக கிலானியின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தியா மிகப்பெரிய தேசம், இது அதன் கலாச்சாரத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்திருந்தார்.