இந்தியா

கர்ப்பிணியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறிய பெண் மருத்துவர்!

webteam

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விடுப்பில் இருந்ததால் கர்ப்பிணியைக் காப்பாற்ற பெண் மருத்துவரே ஆம்புலன்சை ஓட்டிச்சென்ற சம்பவம் மேகாலயாவில் நடந்துள்ளது. பெண் மருத்துவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோபதா சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருபவர் பல்னாம்ஜி சங்மா. அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதனை செய்த பல்னாம்ஜி, கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை தேவை என நினைத்துள்ளார். ஆனால் அந்த சுகாதார நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. 

காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்ப்பிணியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பல்னாம்ஜி முடிவு செய்தார். ஆனால் அன்றைய தினம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர். வேறு ஆம்புலன்ஸ் வசதியும் உடனடியாக கிடைக்காத நிலையில் மற்ற வாகனத்தில் கர்ப்பிணியை அனுப்பவும் மருத்துவர் பல்னாம்ஜிக்கு மனம் இல்லை. உடனடியாக தானே ஆம்புலன்ஸை ஓட்டுவதற்கு முடிவு செய்துள்ளார் பல்னாம்ஜி. உடனடியாக கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு 30 கிமீ தூரம் தானே ஓட்டிச்சென்ற பல்னாம்ஜி சரியான நேரத்தில் அவரை டுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இது குறித்து பேசிய பல்னாம்ஜி, என்னிடம் ஓட்டுநர் உரிமம் இருந்ததால் துரிதமாக செயல்பட்டேன் என தெரிவித்துள்ளார். யாருக்காகவும் காத்திருக்காமல் கர்ப்பிணியின் நலனைக் கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்ட மருத்துவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.