மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணமான நிலையில் இருவரும் மேகாலயா மாநிலத்திற்குத் தேனிலவுக்குச் சென்றனர். அங்கு இருவரும் திடீரென காணாமல் போயினர். சில நாட்கள் கழித்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மலைப் பள்ளத்தாக்கில் புதருக்குள் கடந்த ஜூன் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதன்பின் சில நாட்கள் கழித்து மனைவி சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார்.
இவரைத் தவிர, மேலும் மூவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ’காணாமல் போன தம்பதி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு, தற்போது ’தேனிலவு கொலை’ என்ற பெயரில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சோனமுக்கு வேறு ஒரு நபருடன் காதல் இருந்ததாகவும் அவருடன் சேர்ந்து வாழ விரும்பி கணவரை கொன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தற்போது நடைபெற்று போலீசாரின் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, இக்கொலை வழக்கு தொடர்பாக புதிய பெயர் ஒன்று வெளியாகியுள்ளது. விசாரணையில் முன்னர் அறியப்படாத சஞ்சய் வர்மா, ராஜாவின் மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் விரிவான தொலைபேசி தொடர்பு வைத்திருந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மார்ச் 1 முதல் மார்ச் 25 வரை காவல் துறையினரால் அணுகப்பட்ட அழைப்பு தரவு பதிவுகளின்படி, சோனமும் சஞ்சயும் 119 அழைப்புகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். தற்போது, அவரது மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணியிலும், அவரைக் கைது செய்யும் பணியிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மறுபுறம், ராஜா - சோனம் ஆகிய தம்பதியினரிடம் நான்கு மொபைல் போன்கள் இருந்துள்ளன. இதில், ராஜா ரகுவன்ஷியைக் கொன்ற பிறகு, குற்றஞ்சாட்ட நபர்கள் அவரது தொலைபேசியை உடைத்து, சேதமடைந்த சாதனத்தை எரித்துள்ளனர். அடுத்து, சோனமுக்கு சொந்தமான மற்ற மூன்று மொபைல் போன்கள் இன்னும் காணவில்லை. போலீசார் அவற்றைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிறகு, சோனத்துடைய போன் என்ன ஆனது என்பதை அவர் வெளியிடவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, சோனம் தனது சிம் கார்டை பயன்படுத்தி, வாட்ஸ்அப் செய்திகளைச் சரிபார்க்க டேட்டாவை இயக்கியதாகவும், இதைச் செய்ய அவர் மூன்று போன்களில் ஒன்றைப் பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.