மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணமான நிலையில் இருவரும் மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவுக்குச் சென்றனர். அங்கு இருவரும் திடீரென காணாமல் போயினர். சில நாட்கள் கழித்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மலைப் பள்ளத்தாக்கில் புதருக்குள் கடந்த ஜூன் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதன்பின் சில நாட்கள் கழித்து மனைவி சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார். இவரைத் தவிர, மேலும் மூவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
’காணாமல் போன தம்பதி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு, தற்போது ’தேனிலவு கொலை’ என்ற பெயரில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சோனமுக்கு வேறு ஒரு நபருடன் காதல் இருந்ததாகவும் அவருடன் சேர்ந்து வாழ விரும்பி கணவரை கொன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தற்போது நடைபெற்று போலீசாரின் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில், ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்வதற்கு முதல்கட்டமாக ரூ.4 லட்சம் கொடுப்பதாக கூலிப் படையினரிடம் சோனம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் அவர்கள் சென்ற மலையில் ஏற முடியாமல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், ராஜாவை கொலை செய்ய மறுத்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன சோனம், கூலிப்படையினரிடம் ’ரூ.20 லட்சம் தருகிறேன். அவரை எப்படியாவது கொன்றுவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார். அதன்பிறகே அவர்கள் தலையில் அடித்து கொன்றுள்ளனர். பின்னர், சோனத்தின் உதவியுடனேயே அவர் சொன்ன இடத்திலேயே அந்த உடலையும் தூக்கி எறிந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தவிர, சோனம் தன் காதல் விவகாரம் குறித்து தன்னுடைய தாயாரிடம் திருமணத்திற்கு முன்பே கூறியுள்ளார். ’அப்படியும் நீங்கள் வேறு யாருக்காவது தன்னை திருமணம் செய்து கொடுத்தால் அந்த மாப்பிள்ளைக்கு என்ன ஆகும் என்று என்னால் சொல்ல முடியாது’ என சோனம் முன்னதாகவே மிரட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதையும் மீறியே அவரது தாயார் ராஜா ரகுவன்ஷிக்கு திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், இந்தூரில் உள்ள ராஜா ரகுவன்ஷி இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர், “ஆதாரத்தின் அடிப்படையில் சோனம்தான் கொலையைச் செய்திருப்பார் என்று 100 சதவிகிதம் நம்புகிறேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ராஜ் குஷ்வாஹாவுடன் (காதலர்) தொடர்புடையவர்கள். சோனம் ரகுவன்ஷியுடனான உறவை நாங்கள் முடித்துக்கொண்டோம். ராஜாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கோருகிறேன்.சோனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை தூக்கில் போட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமா, “நான் யாரையும் கொலை செய்ததாகக் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஆனால் சோனமின் தாயார் என் மகனுடனான திருமணத்திற்கு முன்பே ராஜ் குஷ்வாஹாவைப் (காதலர்) பற்றி அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவளுடைய நடத்தை மிகவும் நன்றாக இருந்தது. நான் அவருடன் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அவர், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அவர், எப்போதும் தன்னுடைய மொபைல் போனில் பேசியபடி இருந்தார். அப்போது நான் அவர் என்ன செய்கிறார் என்பதை நான் கவனிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ராஜ் குஷ்வாஹா தாயார் சன்னி தேவி, “எனது மகன் தனது முதலாளியின் மகள் சோனத்துடன் எந்த உறவையும் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்குள் எதுவும் இருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ராஜ் எந்தப் பெண்ணுடனும் பேசியதில்லை. சோனம் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய வீட்டில் மட்டுமே வேலை மட்டும்தான் செய்தான். அவனால் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும்? அவருக்கு 20 வயதுதான் ஆகிறது. சோனமுடனான உறவைப் பற்றி அவனால் எப்படி யோசிக்க முடியும். சோனமை ஒருபோதும் அவன் சந்தித்ததில்லை. ராஜ், சோனத்துடன் உறவில் இருந்திருந்தால், அவரது பணியிடத்தில் உள்ள மற்றவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள் அல்லது அதைப் பற்றி அறிந்திருப்பார்கள். ராஜ் சோனமுடன் மொபைல் போனில் பேசியது தனக்குத் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு முடித்த 20 வயதான ராஜ் குஷ்வாஹா, இந்தூரில் சோனமின் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவன பிரிவில் கணக்காளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.