இந்தியா

மேகாலயா: பாதுகாப்பை மீறி கர்ப்பமடைந்த மோப்ப நாய் - விசாரணைக்கு உத்தரவிட்ட பிஎஸ்எஃப்

JustinDurai

மேகாலயாவில் மோப்ப நாய் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றதை தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்திய ராணுவத்தில் பல்வேறு வகையான நாய்கள் பயிற்சி பெற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக ராணுவ பாதுகாப்பு பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள் இனப்பெருக்கம் செய்யவோ அல்லது கர்ப்பமாக இருக்கவோ கூடாது என்பது விதிமுறை. ஏனெனில் இத்தகைய நாய்கள் உயர் பாதுகாப்பு மட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதால் அவற்றை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. எனவே பயிற்சியளிக்கும் வீரர்களின் கண்ணசைவிலே இந்த மோப்ப நாய்கள் இருக்கும். கால்நடை மருத்துவக் குழுவினரின் மேற்பார்வையில் மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே மோப்ப நாய்கள் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மேகாலயா மாநிலத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் உள்ள எல்லைப் புறக்காவல் நிலையத்தில், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) சொந்தமான லால்சி என்ற பெயருடைய பெண் மோப்ப நாய் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நாய் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இதுகுறித்த தகவல் பிஎஸ்எஃப் உயரதிகாரிகளுக்கு தெரியவரவே, பாதுகாப்பை மீறி மோப்ப நாய் கர்ப்பமடைந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.