இந்தியா

மேகாலயாவில் இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து - திரிணாமூல் காங்கிரஸ் கோரிக்கை!

ஜா. ஜாக்சன் சிங்

மேகாலயாவில் இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தா சேத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மனுவுக்கு மத்திய அரசு அண்மையில் பதில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், "இந்து மதத்தினர் குறைவாக இருக்கும் மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தா சேத்ரி மேற்குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்தார்.

அவர் கூறுகையில், மேகாலயாவில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். அவ்வாறு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டால் இந்துக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகைகள் கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்" என்றார்.