நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. அதன்படி கடந்த திங்கள்கிழமை காலை மார்க்-3 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவிருந்தது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 56 நிமிடங்களுக்கு முன்னதாக, விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது
உலகமே உற்றுநோக்கும் நிகழ்வாக இருக்கும் சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் இரு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. வனிதா மற்றும் ரித்து ஆகிய இரண்டு பேரும் சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர். 40 வயதான இருவரும் கடந்த 20 வருடங்களாக இஸ்ரோவில் பணியாற்றி வருகின்றனர். ரிது மங்கல்யான் உள்ளிட்ட பல ஏவுகணை திட்டங்களில் பணியாற்றியுள்ளார். வனிதா இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதலில் திட்ட இயக்குநர் பொறுப்பேற்க வனிதா தயங்கியதாகவும், பலரின் ஊக்கத்தினால் அவர் பொறுப்பேற்று இன்று சாதனையாளராக திகழ்ந்து வருகிறார்.
(விஞ்ஞானி வனிதா)
வனிதா குறித்து பேசிய விஞ்ஞானி அண்ணாதுரை, ''சிக்கல்களை உடனடியாக கண்டறிந்து சரிசெய்யும் திறனுக்குச் சொந்தக்காரர் வனிதா. குழுவை நிர்வாகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால் வனிதா சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் சேர்க்கப்பட்டார்'' என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால், இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர். சிறு வயதில் வானியியல் மீதுகொண்ட ஆசையால் விஞ்ஞானத்துக்குள் நுழைந்த ரிது, 1997ம் ஆண்டு இஸ்ரோவில் விண்வெளி பொறியாளராக தன் பயணத்தை தொடங்கினார். தன் பயணம் குறித்து பேசிய ரிது, ''விஞ்ஞானத்துக்குள் நுழைய இஸ்ரோவே எனது ஒரே தேர்வாக இருந்தது. நான் எனது குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்ரோ மற்றும் அவற்றின் செயல்பாடுகளை செய்தித்தாள் மூலம் சேகரித்து வைப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
(விஞ்ஞானி ரித்து)
இளம் விஞ்ஞானி விருது, விண்வெளித்துறையில் பெண் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்று அடுத்தக்கட்டம் நோக்கி ரித்து சென்றுகொண்டிருக்கிறார்.