இந்தியா

கேரள நிலச்சரிவு மீட்பு பணி: பம்பரமாக சுழன்று பணிகளை கவனிக்கும் என்டிஆர்எப் பெண் அதிகாரி

webteam

கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மீட்பு பணிகளை மேற்கொள்ளும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதல் பெண் அதிகாரி ரேகா நம்பியார் ஆவார்.

கேரளாவில் அண்மையில் பெய்த கனமழையில் பெட்டிமுடி மற்றும் ராஜமாலா உள்ளிட்டப் பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றி வந்த நபர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து வரும் நிலையில், தற்போது வரை 49 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காணாமல் போன நபர்களை தேடும் பணியானது தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பணிகளை 55 நபர்கள் கொண்ட தேசியப் பேரிடர் மேலாண்மை குழுவினர் செய்து வரும் நிலையில், குழுவிற்கு முதன்மை அதிகாரியாக இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவரும் ரேகா நம்பியார், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதல் பெண் அதிகாரி ஆவார்.

கேரளாவை பூர்விகமாகக் கொண்ட ரேகா, பிறந்தது படித்தது எல்லாம் சென்னை. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் பணியைத் தொடர்ந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு வரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதல் பெண் அதிகாரியாக பதவியேற்ற ரேகா தமிழ்நாடு அரக்கோணத்தில் பணியைத் தொடர்ந்தார். சென்னை வெள்ளம் மற்றும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கேரளா சந்தித்த வெள்ளம் ஆகியவற்றில் முதன்மை அதிகாரியாக இருந்து பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் தற்போது நிலச்சரிவு குறித்த விவரங்களை இந்தியா டைம்ஸ் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறும் போது “ வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 83 நபர்கள் சிக்கியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மையைச் சேர்ந்த இரு குழுவினர் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை 49 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 19 நபர்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. எங்களது இரு குழுவினரும் ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையிலும் சடலங்களைத் தேடி வருகின்றனர்.

அதிகமான பனிமூட்டம் இருப்பதால் 20 முதல் 30 அடி வரை தெரிவு நிலை இருக்கிறது. இன்னொரு சிக்கல் கடிமான பெரிய பாறைகள், இதனை அகற்றிவிட்டு சடலங்களை தேடும் பணியை தொடர வேண்டும். நிலச்சரிவு நடந்த இடத்தில் நீர் தேங்குவது மற்றொருப் பிரச்னையாக இருக்கிறது. இதனால் எங்களால் ஆழமாக தோண்டி உடல்களை எடுக்க முடியவில்லை" என்றார்.