டெல்லியில் இயங்கி வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வரும் பெங்களூருவை சேர்ந்த 22 வயதான மாணவர் விகாஸ் இன்று மாலை 6 மணியளவில் மாணவர்கள் விடுதியின் மேல்மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
‘ஹாஸ்டலின் மாடியிலிருந்து மாணவர் ஒருவர் குதித்து விட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு நாங்கள் விரைந்த போது காயமட்ட மாணவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு நாங்கள் சென்று பார்த்த போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்’ என தெரிவித்துள்ளனர் போலீசார்.
2018 பேட்ச்சை சேர்ந்த மாணவர் விகாஸ் இதற்கு மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை அவர் ட்யூட்டியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஜூன் 5 முதல் இந்தியாவின் முதன்மை மருத்துவ நிறுவனத்தில் தற்கொலை செய்து கொண்ட ஐந்தாவது வழக்கு இதுவாகும்.