திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்படும் தீடீர் உடல்நலக் குறைபாடுகளைத் தீர்க்கும் விதமாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸில் காத்திருந்து பிறகு சுவாமியை தரிசிக்கின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பல மணிநேரம் இந்த காம்பிளக்ஸில் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இங்கு பால், டீ, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதியோருக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. ஆதலால், தீடீர் உடல்நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கு 24 மணி நேர மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு உத்தரவிட்டுள்ளார். மேலும் வைகுண்டம் காம்பிளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக தொலைபேசி வசதியும் விரைவில் செய்து தரப்பட உள்ளது.