ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை பத்திரமாக உயிருடன் மீட்கும் வகையில் புதிய மீட்பு உபகரணம் ஒன்றை விஜயவாடாவைச் சேர்ந்தவர் கண்டுபிடித்துள்ளார்.
நாடு முழுவதும் அவ்வப்போது ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு குழந்தைகள் தவறி விழும்போது பெரும்பாலான குழந்தைகள் இரண்டு மூன்று நாட்களுக்கு பின் உயிர் இழந்தை நிலையில் மீட்கப்படுகின்றனர். குழந்தைகள் உயிருடன் மீட்கப்படுவது அரிதிலும் அரிதாக உள்ளது. இதற்கு காரணம் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை பத்திரமாக மீட்க போதிய உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதே ஆகும்.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இயந்திர ஒப்பந்ததாரரான ஹேம்நாத் ராஜா என்பவர், குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் இருந்து தவறி விழுந்தால் பத்திரமாக மீட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது கேமரா, எல்இடி லைட், கப்பி, இயந்திர கை மற்றும் இயந்திர கால் உதவியுடன் செயல்படுகிறது.
துணை உபகரணம் மூலம் ஆக்ஸிஜன் தொடர்ச்சியாக செலுத்தப்படும். குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன், இயந்திர கை உதவிக்கொண்டு கப்பி குழந்தையை பிடித்து மேலே தூக்கும். குழந்தை மேலெழுந்து வரும்போது கீழே விழாமல் இருக்க மற்றொரு கருவி உதவும். இதன் அடிப்படையில் இந்தக் கருவி செயல்படுகிறது. தற்போது மூன்று முறை சோதனை முயற்சியில் இதனை அவர் செயல்படுத்தியுள்ளார். உபகரணத்திற்கான காப்புரிமையும் அந்த இயந்திர ஒப்பந்ததாரர் பெற்றுள்ளார்.