இந்தியா

மகாராஷ்டிராவை உலுக்கிய தலித் அமைப்புகளின் போராட்டம் வாபஸ்

மகாராஷ்டிராவை உலுக்கிய தலித் அமைப்புகளின் போராட்டம் வாபஸ்

rajakannan

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்ற தலித் அமைப்புகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பீமா கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ஜனவரி ஒன்றாம் தேதி திரளான தலித் மக்கள் திரண்டிருந்தனர். அதற்கு சில வலதுசாரி இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். மேலும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தலித் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

இதனையடுத்து தாக்குதலை கண்டித்து தலித் மக்கள், தலித் கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் வெடித்தது. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.  குறிப்பாக மும்பை மற்றும் புனே பகுதியில் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

வன்முறை பரவுவதை தடுக்க மகாராஷ்டிரா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும், சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறின.

இந்நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்தார். இதனால் மாலை 4.30 மணி முதல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பேத்கர், “நிறைய இந்துத்துவா அமைப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பீமா கோரேகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். பந்த் அமைதியாக நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இது தலித் மக்களின் போராட்டம் மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட எல்லா மக்களின் போராட்டம்தான்” என்றார்.