உத்தரப்பிரதேசத்தில் உள்ள சம்பல் காவல்துறை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதி உட்பட 10 மசூதிகளை மார்ச் 14 ஆம் தேதி ஹோலி ஊர்வலத்தின் பாதையில் பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் தார்பாய்களால் மூட முடிவு செய்துள்ளது
இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்துவரும் இதே காலகட்டத்தில், வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையான ஹோலியும் கொண்டாடப்படுகிறது. இதனால் உத்தரபிரதேசத்தில் மதமோதல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் நிறைந்த அலிகார், ஷாஜஹான்பூர் நகரங்களில் மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் பதற்றத்திற்கு வாய்ப்புள்ள இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார். ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்களும் நகரங்களின் முக்கிய பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வு பதிவுகளும் வதந்திகளும் பரவுவதை காவல்துறை சிறப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.
ஹோலி கொண்டாட்டங்களின்போது சம்பாலில் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருக்கும் பத்து மசூதிகளில், ஷாஹி ஜமா மஸ்ஜித், லடானியா வாலி மஸ்ஜித், தானே வாலி மஸ்ஜித், ஏக் ராத் மஸ்ஜித், குருத்வாரா சாலை மஸ்ஜித், கோல் மஸ்ஜித், கஜூர் வாலி மஸ்ஜித், அனார் வாலி மஸ்ஜித், அனார் வலிகா மஸ்ஜித் ஆகியவை அடங்கும். மறுபுறம், ஹோலி பண்டிகையையொட்டி, தொழுகை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஹோலி பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், வெளியில் வருவோர் தார்பாய்களை மூடிக்கொள்ள வேண்டும் எனவும் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.