இந்தியா

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மாருதி ஆலை தற்காலிகமாக மூடல்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மாருதி ஆலை தற்காலிகமாக மூடல்!

JustinDurai

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மாருதி ஆலை வரும் 16-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பகுதியளவு ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கத் துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா பரவலால் பல இடங்களில் கார் விற்பனை முடங்கி உள்ளதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கார் உற்பத்தியை பெருமளவு குறைத்துள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்கும் வகையில், தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன் அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா அறிவித்தார். இதனையொட்டி ஆலையை மே 1 முதல் 9-ம் தேதி வரை தற்காலிகமாக மூடி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் நிலைமை சீரடையாததால் ஆலை மூடல் வரும் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.