இந்தியா

போர் விமானவிபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்!

போர் விமானவிபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்!

webteam

போர் விமான விபத்தில் உயிரிழந்த பைலட்டின் மனைவி எழுதிய கடிதம் அனைவரின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிப்.1-ஆம் தேதி, பெங்களூருவில் உள்ள பழைய எச்.ஏ.எல் விமான ஓடுதளத்தில், போர்விமான ஒத்திகையின் போது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 32 வயதான ஐஏஎப் அதிகாரி சமீர் அப்ரோலும், 31 வயதான கோ-பைலட் சித்தார்த் நேகியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் ஐஏஎப் அதிகாரி சமீர் அப்ரோல், மிரஜ் 2000 என்ற பிரஞ்சு போர்விமானத்தை இயக்குவதில் அதிக விருப்பமுடையவர். இந்த சம்பவம் உயிரிழந்த பைலட்களின் குடும்பங்களுக்கு பேரிடியாக அமைந்தது. 

சமீர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை சஞ்ஜீவ் அப்ரோல், அந்த ஊரில் நீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதாவது அவரது குடும்பம், ராணுவத்திற்கு தொடர்பில்லாத குடும்பம். இருப்பினும், சமீர் தன்னுடைய தொடர் முயற்சியால் அவர் கனவாக இருந்த ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று அதில் அதிகாரியும் ஆனார். அதனையடுத்து 2015-ல் தோழி கரீமாவையும் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவரின் இறப்பு கரீமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கரீமா வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவும் மக்கள் அனைவரின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. அந்த பதிவில் தன்னுடைய கணவரின் தியாகத்தை பற்றியும், தங்களது இழப்பின் வலி பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் கரீமா. “ தன் கணவன், இந்த தேசத்திற்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்று ஏற்கெனவே சொன்னதையே தற்போது நிறைவேற்றிவிட்டார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருப்பதை பார்த்துபோது சோகத்தில் உறைந்துபோனேன். இதுபோல பல ராணுவ வீரர்களின் குடும்பங்கள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் விபத்துக்கான காரணத்திற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.