மல்லோஜுல வேணுகோபால் ராவ் Pt Web
இந்தியா

"ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதே ஒரே வழி..” சரணடைந்த மாவோயிஸ்ட் சித்தாந்த தலைவர் பேட்டி.!

மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதே ஒரே வழி என்று மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், சித்தாந்தத் தலைவராகக் கருதப்படுபவருமான மல்லோஜுல வேணுகோபால் ராவ் கூறியுள்ளார்.

PT WEB

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் முழு வீச்சில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, ஆயுதம் வைத்திருக்கும் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் சரணடைந்த மாவோயிஸ்ட் சித்தாந்தத் தலைவர் மல்லோஜுல வேணுகோபால் ராவ், முதல்முறையாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தவறுகளால்தான், அதற்கு மக்கள் ஆதரவு சரிந்தது என்று கூறியுள்ளார்.

மல்லோஜுல வேணுகோபால் ராவ்

தற்போது 70 வயதாகும் ராவ் , மாவோயிஸ்ட் போராளியாக சுமார் 50 ஆண்டுகள் காட்டில் கழித்த வாழ்க்கையை "ஒரு பொன்னான அத்தியாயம்" என்று குறிப்பிட்டார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகத் தாம் மனநிறைவுடனும் ஊக்கத்துடனும் பணியாற்றியதாகக் கூறினார். பழங்குடி மக்களுக்கு வனத் துறை அதிகாரிகள் கடுமையான அநீதிகளை இழைத்ததாகவும் பழங்குடி மக்கள் உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற முடியாதவர்களாக இருந்ததாகவும் ராவ் நினைவுகூர்ந்தார்.

ஆனால், 1980களின் நிலைமைகள் தற்போது இல்லை என்றும், மாறிவரும் நிலைகளுக்கேற்ப சித்தாந்தத்தை செழுமைப்படுத்த மாவோயிஸ்ட் கட்சி தவறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில், பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை மாவோயிஸ்ட் இயக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டதாகக் கூறினார். இனியும் ஆயுதப் போராட்டத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பது அறிவார்ந்த செயல் அல்ல என்பதை உணர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பசவராஜ், ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்திருந்த நிலையில், அவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னரே கூட்டாகச் சரணடையும் முடிவை தான் எடுத்ததாகவும் ராவ் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பசவராஜ்

மாவோயிஸ்ட்களின் ஆயுதப் போராட்டத்துக்கு முன்னெப்போதையும்விட இப்போது அதிக தேவை உள்ளது என்று எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பவர்கள் காற்றில் வாள் சுழற்றுபவர்கள் என்று ராவ் விமர்சித்துள்ளார். இனியும் வன்முறைப் பாதையைத் தொடர்வது அழிவுக்கே வழிவகுக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.