நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால் twitter
இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டம்: ஆம் ஆத்மி புறக்கணிப்பால் கூட்டணியில் சலசலப்பா?

பாட்னாவில் நாளை நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணிக்க இருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

Prakash J

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த வருடத்துடன் 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, இடையில் நடைபெற்ற சில மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதையடுத்து தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தப் பணியை சீரியஸாய் செய்துவரும் நிதிஷ்குமார், இதற்காக பல்வேறு மாநில முதல்வர்களையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். நிதிஷ்குமாரின் முன்னெடுப்பிற்கு பெருவாரியான எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (ஜூன் 23) பாட்னாவில் நடைபெற இருக்கிறது.

காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் என அறிவித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இக்கூட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிதான் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வந்தது. ஆம் ஆத்மியை ஆதரிப்பது தொடர்பாக, காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

நிதிஷ்குமார், மல்லிகார்ஜுன கார்கே

இதுபோன்ற எந்த நிபந்தனைகளுக்கும் காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நிதிஷ்குமார்கூட இவ்விவகாரத்தில் பதில் சொல்லவில்லை. இந்தச் சூழலில்தான் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக, அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் வலியுறுத்தி இருந்தார். இந்தச் சட்டம் தொடர்பாக ஆம் ஆத்மிக்கு ஆதரவாக காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை மையமாக வைத்து தற்போது ஆம் ஆத்மி, இக்கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார். அவர், ”இக்கூட்டம் தலைவர்களின் கைகளை கோர்ப்பதைப் போன்றுதான் தெரிகிறதே தவிர, இதயங்களை இணைப்பதுபோல இல்லை” எனத் தெரிவித்து இதைப் புறக்கணித்துள்ளார். அதுபோல் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சில எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் மிகவும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sukanta Majumdar

இதுகுறித்து பாஜக, ”இது, சந்தர்ப்பவாத கூட்டணி; எந்தவிதமான பலனையும் தராது; வீண் முயற்சி” என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், "வீணான முயற்சி இது. கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு இதேபோன்ற முயற்சிகளை நாம் பார்த்தோம். அதன்முடிவுகள் நம் முன் இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் நம்புகிறார்கள். அவர்கள் நிலையில்லாத, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.